சாக்கிய நாயனார் (Sakiya Nayanar)

சாக்கிய நாயனார் (Sakiya Nayanar)

அன்பே சிவம், சிவமே அன்பு என்பதற்கு பொருத்தமான எடுத்துக்காட்டு இந்த சாக்கிய நாயனார் கதை. இறைவனுக்கு உள்ளன்போடு எதை சமர்பித்தாலும், இறைவன் அதை அன்போடு ஏற்றுக்கொள்வர் என்பதை சாக்கிய நாயனார் வரலாறு புலப்படுத்துகிறது.

சாக்கியர் காஞ்சிபுரம் அருகில் உள்ள திருச்சங்கமங்கை என்ற ஊரில் வாழ்ந்தவர். இவர் பௌத்த மதத்தை தழுவியவர். சாக்கியம் என்றால் பௌத்தம் என்றும்  பொருள் உண்டு , இதனால் தான் சேக்கிழார் பெருமான் இவரை சாக்கிய நாயனார் என்று பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவர் இளமைக் காலத்திலேயே இனி ஒரு பிறப்பு வேண்டாம் என்ற எண்ணம் கொண்டவராகவும், ஞானத்தை பற்றிய தேடலில் அதிக ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். அதற்கு என்ன செய்ய வேண்டும் என தேடத் தொடங்கி பல சமய நூல்களையும் கற்க தொடங்கினர். அதன் ஒரு கட்டமாக சைவ சமய நூல்களை படித்தார். அதில் ஒரு தெளிவைக்கண்டார். பிறவிப்பெருங்கடலைக் கடக்க சிவனே வழி என்று உணர்ந்தார்.

சாக்கிய கோலத்தில் இருந்ததாலும், அங்கு சாக்கியர்கள் அதிகம் வசித்த காரணத்தினாலும், ஈஸ்வர வழிபாட்டை யாரும் அறியா வண்ணம் மறைமுகமாக செய்து வந்தார். தினமும் சிவலிங்க தரிசனம் செய்த பின் தான் உணவு உண்ண வேண்டும் என்ற உயர் பழக்கத்தை பின்பற்றினார்.


ஒரு நாள் வெட்ட வெளியில் சாக்கிய நாயனார் நடந்து சென்றுகொண்டிருந்தபோது  அவரது கண்ணில் வழிபாடு எதுவுமின்றி கிடந்த சிவலிங்கம் ஒன்று தென்பட்டது. பராமரிப்பின்றி காணப்பட்ட அந்த லிங்கத்தை கண்டு வேதனை கொண்டார். பின் லிங்கத்தை தூய நீரால் அபிஷேகம் செய்து, பூக்கள் கொண்டு பூஜை செய்ய நினைத்தார். ஆனால் அந்த பரந்து விரிந்த வெட்ட வெளியில் நீரோ மரமோ பூக்களோ இல்லை.  ஈசன் மீது கொண்ட அளவு கடந்த அன்பால் கீழே இருந்த கற்களை எடுத்து சிவாயநம பஞ்சாச்சர மந்திரத்தை ஓதி, அதை சிவலிங்கத்தின் மீது வீசினர். தன்னை கடுமையாய் வழிபட்டாலும் அதை கனிவாய் எடுத்துக்கொள்பவர்  சிவபெருமான். ஆதலால் தான் சாக்கியர் எறிந்த கற்கள் கைலையில் மலர்களாக சிவனின் பாதைகளில் விழுந்தது. இதை அவர் இறைவனை பூஜிப்பதற்காக செய்த்தாலும், பிறர் பார்க்கும் போது கல்லால் எறிவது போல் தோன்றும். அதனால் தனக்கு பாதகம் இல்லை என்று கருதி, இந்த வழிபாட்டை தினமும் செய்து வந்தார். தினமும் சிவலிங்கம் இருக்கும் இடத்துக்கு வந்து  கல் எறிந்து வழிபட்ட பின்னரே வீட்டிற்குச் சென்று உணவருந்துவர். இப்படி பல நாட்கள் கடந்தன. 

ஒரு நாள் ஆழ்ந்த  சிவசிந்தனையில் இருந்த சாக்கிய நாயனாருக்கு சிவலிங்க பூஜை செய்வது மறந்து போய், அதற்கு முன்பே உணவு உண்ண அமர்ந்துவிட்டார்.  உணவை அருந்த போன தருவாயில், அவருக்கு சிவ பூஜை செய்ய மறந்தது நினைவுக்கு வந்தது. உணவை அப்படியே வைத்துவிட்டு சிவலிங்கத்தை நோக்கி சென்று, வர தாமதித்ததற்கு மன்னிப்பு கேட்டு, கீழே கிடந்த கற்களை எடுத்து எறிந்த வழிபட்டார். அதில் உள்ளம் நெகிழ்ந்த ஈசன், இடப வாகனத்தில் தன் தேவி பார்வதியுடன் காட்சி கொடுத்தார், மேலும் சாக்கிய நாயனாரின் நீண்ட நாள் வேண்டுதலான முத்தி பேற்றையும் அருளிச்செய்தார்.

சாக்கிய நாயனார் கல் எறிந்து வழிபட்ட சிவலிங்கம், காஞ்சிபுரம் அருகிலுள்ள கோனேரிக்குப்பம் என்ற ஊரில் வீரட்டானேஸ்வரர் என்ற திருநாம் கொண்டு வழிபடப்படுகிறது. அந்த லிங்கத்தில் சாக்கிய நாயனார் வழிபட்டதற்கு அடையாளமாக கல் பட்ட வடுக்கள் புள்ளிகளாய் காணப்படுகின்றன. மேலும் இங்கு கையில் கல்லுடன் சாக்கிய நாயனார் சிலையும் காணப்படுகிறது. 

  



 

Comments