அக்பரும் பீர்பலும் : இராஜ்ஜியத்தில் உள்ள காகங்கள் எத்தனை?

அக்பரும் பீர்பலும் : இராஜ்ஜியத்தில் உள்ள காகங்கள் எத்தனை? 

ஒரு சமயம் மாலை வேளையில்  அக்பரும் பீர்பலும் நந்தவனத்தில் இளைப்பாற நடந்து சென்றுகொண்டிருக்கும் பொழுது, மன்னர் அக்பருக்கு பீர்பாலின் அறிவுக்கூர்மையை சோதித்துப்பார்க்க ஒரு தந்திரமான கேள்வியை கேட்க  எண்ணம் தோன்றியது. சக்கரவர்த்தி பீர்பாலை நோக்கி "நமது இராஜ்ஜியத்தில் மொத்தம் எத்தனை காகங்கள் உள்ளன?" என்று கேட்டார். மன்னர் தன்னை கேளிக்கையாக சோதிக்கிறார் என்று உணர்ந்த பீர்பால், எவ்வித தாமதமும் இன்றி அடுத்த கனமே "அரசே நமது இராஜ்ஜியத்தில் எண்பதாயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி ஒரு காகங்கள் உள்ளன." என்று பதிலளித்தார்.
பீர்பாலின் பதிலை கேட்டு வியந்து போன சக்கரவத்தி அக்பர், மேலும் பீர்பாலை சோதித்து பார்க்க எண்ணி, "நம்மிடம் அதைவிட அதிக எண்ணிக்கையான காகங்கள் இருந்தால்?" என வினவினார். அதற்கு பீர்பால், "ஆ! மற்ற இராஜ்ஜியத்தில் இருந்து எமது இராஜ்ஜியத்திற்கு காகங்கள் வருகை தந்திருக்கும்." என பதிலளித்தார். "அப்படியானால், நம்மிடம் அதைவிட குறைந்த எண்ணிக்கையான காகங்கள் இருந்தால்?" என கேட்டார் மன்னர் அக்பர். "அப்படியானால், எமது இராஜ்ஜியத்தில் இருந்த காகங்கள் மற்ற இராஜ்ஜியத்திற்கு சென்றிருக்கும்." என அசட்டு சிரிப்புடன் பீர்பால் பதிலளித்தார். அக்பர் பீர்பாலின் நகைச்சுவை உணர்வையும் அறிவுக்கூர்மையையும் எண்ணி சிரித்தார்.



Comments