அக்பரும் பீர்பலும்: பீர்பாலின் கிச்சடி
அக்பரும் பீர்பலும்: பீர்பாலின் கிச்சடி
ஒரு குளிர்கால வேளையில் மன்னர் அக்பரும் பீர்பலும் ஏரிக்கரையோரம் நடந்து சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது அக்பர் அந்த குளிர்ந்த ஏரி நீரில் தனது விரல்களை வைத்துவிட்டு குளிர் தாங்காது சற்றென கையை வெளியே எடுத்து, "எவராலும் இந்த குளிர்ந்த நீரினுள் இருந்து ஒரு இரவைக்கூட கழிக்க முடியாது என எண்ணுகிறேன்." என்று கூறினார். பீர்பால் அதனை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, "அதை செய்யக்கூடிய ஒருவரை கண்டுபிடிப்பேன்" என கூறினார். அவ்வாறு ஏரியின் குளிர்ந்த நீரினுள் ஒரு இரவை கழிக்கக்கூடியவர்களுக்கு 1000 பொற்காசுகள் வழங்குவதாக மன்னர் உறுதியளித்தார். விரைவிலேயே, பீர்பலும் 1000 பொற்காசுகள் சவாலை மேற்றக்கொள்ள ஒப்பு கொண்ட ஒரு ஏழையை கண்டுபிடித்தார். இரண்டு அரச காவலர்கள் காவல் நிற்க அந்த ஏழை இரவு முழுவதையும் அந்த உறைபனி நீரினுள் நின்றார். மறுநாள் காலையில் வெகுமதியை பெற்று கொடுப்பதற்காக அந்த ஏழையை அரசவைக்கு அழைத்துச்சென்றனர். மன்னர் அந்த ஏழையிடம் "எவ்வாறு தாங்கள் அந்த உறைபனி நீரினுள் ஒரு இரவை கழித்தீர்கள்?" என கேட்டார். அதற்கு அந்த ஏழை "அரசே தூரத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்கை பார்த்துக்கொண்டு நின்றே முழு இரவையும் கழித்தேன்." என கூறினார். உடனே மன்னர் "தூரத்தில் தெரிந்த விளக்கின் கதகதப்பில் தான் இந்த மனிதன் முழு இரவையும் குளிர் நீரில் கழித்திருக்கிறான், எனவே இவருக்கு வெகுமதி வழங்கமுடியாது" என கூறினார். மன்னரின் வார்த்தைகளை கேட்டு மனமுடைந்து போன அந்த ஏழை, பீர்பாலின் உதவியை நாடினார். மறுநாள் பீர்பால் அரசவைக்கு செல்லவில்லை. காரணத்தை அறிய மன்னர் அக்பரே பீர்பாலின் வீட்டுக்கே சென்றார். அங்கு ஆறு அடி உயரத்தில் பானை ஒன்றை கட்டி தொங்க விட்டு, அதற்கு கீழே நெருப்பை மூட்டி அருகாமையில் பீர்பால் அமர்ந்திருப்பதை கண்டார். மன்னர் பீர்பாலிடம் "என்ன செய்கிறீர்கள்? ஏன் இன்று அரசவைக்கு வரவில்லை?" என கேட்டார். அதற்கு பீர்பால் "நான் கிச்சடி சமைக்கிறேன் அரசே, அதனால் தான் அரசவைக்கு சமூகமளிக்க முடியவில்லை" என கூறினார். "ஆறடி உயரத்தில் பானை இருக்க கிச்சடி சமைப்பது எப்படி சாத்தியமாகும்?" என மன்னர் வேடிக்கையாக சிரித்தார். அதற்கு பீர்பால் "இது சாத்தியம் அரசே, தூரத்தில் தெரிந்த விளக்கின் கதகதப்பில் ஒருவரால் நீரில் முழு இரவையும் கழிக்க முடியும் என்றால், இந்த கிச்சடியையும் அதே முறையில் சமைக்கலாம் அரசே." என கூறினார். பீர்பால் சாமர்த்தியமாக உணர்த்திய கருத்தை புரிந்துகொண்ட மன்னர் அக்பர், சவாலை முடித்த அந்த ஏழையை அழைத்து வெகுமதியை வழங்கினார்.
Comments
Post a Comment