அக்பரும் பீர்பலும்: முட்டாள் திருடன்

அக்பரும் பீர்பலும்: முட்டாள் திருடன் 
ஒரு சமயம், மன்னர் அக்பரின் இராஜ்ஜியத்தில் இருந்த வணிகர் ஒருவரின் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. பொருட்களை பறி கொடுத்த அந்தவணிகர் நீதிமன்றத்தின் உதவியை நாட மன்னர் அக்பரிடம் சென்றார். மன்னர் திருடனை கண்டுபிடிக்கும் பொறுப்பை பீர்பாலிடம் ஒப்படைத்தார் . அந்த வணிகர் தன்னிடம் பணி புரியும் பணியாளன் ஒருவன் தான் இதை செய்திருக்க வேண்டும் என சந்தேகித்தார், அதனை பீர்பாலிடமும் கூறினார். அந்த வணிகரிடம் பணி புரியும் பணியாட்களை வரிசையாக நிற்க சொன்னார் பீர்பால்.  அவர்களிடம் திருட்டு போன சம்பவத்தை பற்றி விசாரித்த போது பணியாட்கள் எல்லோரும் தாம் அதை செய்யவில்லை என மறுத்தனர். பின்னர் பீர்பால் பணியாட்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே அளவான குச்சியை வழங்கி "இந்த திருடனை கண்டுபிடிக்கும் அதிசய குச்சி, யார் கொள்ளையடித்தாரோ  அவரின் குச்சி நாளைக்குள் இரண்டு அங்குலங்கள் அதிகரிக்கும்." என கூறினார். மறுநாள் பீர்பால் பணியாட்கள் அனைவரின் குச்சிகளையும்  பரிசோதித்து பார்த்த போது ஒருவனுடைய குச்சி மட்டும் இரண்டு அங்குலங்கள் குறைவாக இருந்தது. "அந்த உயரம் குறைந்த குச்சியை வைத்திருந்தவன் தான் உண்மையான திருடன்" என பீர்பால் கூறினார். எவ்வாறு கண்டுபிடித்தீர்கள் என வணிகர் கேட்ட போது, "இது ஒன்றும் அதிசய குச்சி அல்ல, உண்மையான திருடன் குச்சியின் உயரம் அதிகரிக்கும் என்ற பயத்தில் தனது குச்சியில் இருந்து இரண்டு அங்குலங்களை வெட்டியிருக்கிறான், இதை வைத்தே கண்டுபிடித்தேன்" என்றார் பீர்பால். பின்னர் உண்மையான திருடனுக்கு மன்னரால் தகுந்த தண்டனை வழங்கப்பட்டது. 

நீதி: உண்மையே எப்பொழுதும் மேலோங்கும்.

 

Comments